திருவண்ணாமலை ஆக.12-
ஆடி மாத பவுர்ணமியையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. அதன்படி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பு காரணமாக நேற்று அமர்வு தரிசனம் சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனத்துக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு விடிய விடிய 3 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. தூரமுள்ள மலைவளத்தில் உள்ள அஷ்டலிங்கங்களை வழிபட்டு கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை நகராட்சி மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆங்காங்கே ஆன்மீக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.