நாமக்கல், ஆக. 11 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன், 45. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.
அந்தப் பணியில், வெண்ணந்தூர் ஒன்றியம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா, 45, நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்த செல்வி, 40 மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி 55 ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஓட்டுனர் சுப்பிரமணி டிராக்டரில் மண்ணை அள்ளிக் கொண்டு சுமார் 30 அடி பள்ளத்தில் இருந்து மேலே ஏறும் போது, டிராக்டர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் டிராக்டர் மேல் அமர்ந்து வந்த இரண்டு பெண்களும் பள்ளத்தில் விழுந்தனர். இதில் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் இவ்விபத்து நடந்த இடத்திலேயே கவிதா உயிரிழந்தார். தலையில் பலத்த காயங்களுடன் இருந்த செல்வியை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் டிராக்டரை இயக்கிய ஓட்டுனர் சுப்பிரமணி அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
மேலும், இவ்விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.