அம்பத்தூர், ஆக. 11 –
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் உழவர் சந்தை அருகே தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் முத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில், அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 40 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் ஏழை மக்களின் வீடுகளுக்கு இதுவரையிலும் பட்டா வழங்காததை கண்டித்தும், பலமுறை மனு கொடுத்தும் அம்மனுக்கள் மீது பரிசீலனை கூட செய்ய இயலாத நிலையில் அரசு அதிகாரிகள் மெத்தனம் போக்கில் இருந்து வருவதாகவும், அப்பகுதி ஏழை மக்களின் குழந்தைகள் படிப்பதற்கும், முதியோர்களுக்கு மருத்துவ செலவிற்கும், வீட்டினை அடமானம் வைக்க முயன்றால் வங்கிகள் பட்டாவை முதலில் கேட்பதாகவும், அது இல்லை என்ற நிலையில், அவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கை மேம்பாடு காணமுடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட, இந்நாள் வரை 40 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்காமல் இருப்பதை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் வந்திருந்நனர். மேலும் கடலூர் மாவட்டம் தலைவர் விஜயகுமார் பானு நகர் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.