கும்போணம், ஆக. 10 –
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை சர்வமானிய தெருவில் வசித்து வரும் மாசிலாமணி சபதியின் வீட்டில் பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், இன்ஸ்பெக்டர் இந்திரா உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது பத்தடி உயரம் உள்ள சிவகாமி சிலை உட்பட எட்டு சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இத்தகவலறிந்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சபதிகள் மாசிலாமணி வீட்டின் முன்பு குவிந்து சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தனர். பழங்கால சிலைகள் என்றால், சிலையின் உள்ளே மண் இருக்காது எனவும், கைப்பற்றப்பட்ட சிலைகள் தற்போது செய்யப்பட்டவை எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் டிஎஸ்பி அசோகன், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவா, செந்தில்குமார், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சிலையை தடுப்பு பிரிவு போலீசார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.