காஞ்சிபுரம், ஆக. 04 –
தமிழகத்தில் பழங்கால தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இது பெரும்பாலான கிராமங்களிலோ நகரங்களிலோ மாணவ மாணவியர்களுக்கு கொண்டு சேர்வதில் சிக்கல் நிலவி வருகிறது .
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சிவாஜியின் நாட்டிய பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நடனம் பயின்று வருகின்றனர்.
ஆர்வத்துடன் இக்கலையை பயின்றுவரும் மாணவியர்கள் பெரும்பாலானோர் கிராமப்புற மாணவர்களே, மேலும் இவர்கள் அனைவருமே மிகவும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் தமிழ் மற்றும் தமிழர்களின் தேவையறிந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதக் கலையினை காக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பரதக் கலையினை ஒரு பாடத்திட்டமாக அறிவித்து பாரம்பரிய கலைகளை பாதுகாக்க வேண்டும் என கிராமப்புற மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















