பொன்னேரி, ஏப். 07 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ளது ஏலியம்பேடு கிராமம். இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலும் இந்த கிராமத்தில் இருந்து செல்லும் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வர வேண்டுமெனில் பத்து கிலோமீட்டர் வரை நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும், 9 மணிக்குள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. சில நேரங்களில் 9 மணிக்கு மேல் செல்ல நேரிடும் நாட்களில் வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட் ஆகும் நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது.
சில நேரங்களில் இந்த சிறு வயது பிள்ளைகளின் மனதில் இப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் பிறந்ததால் இவ்வளவு கஷ்டத்தை நாம் சந்திக்கின்றோமா என்ற பல்வேறு கேள்விகள் தவிர்க்க இயலாத நிலையில் தினம் படும் சிரமங்கள் ஏராளம் என்கின்றனர் இப்பள்ளி மாணாக்கர்கள் மேலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டோம் ஆனால் இன்றளவும் அரசு பள்ளியில் படிக்கும் எங்களைப் போன்ற பிள்ளைகள் கல்வி கற்க பல மைல் தூரம் நடக்க வேண்டிய நிலை உள்ளது.
அரசும் அதிகாரிகளும் பள்ளிக் கல்வித்துறையும் எங்களைப் போன்ற மாணவர்களின் நிலையை உணர்ந்து எங்களுக்கு வேண்டிய பேருந்து வசதியை செய்து தந்தால் எங்களைப் போன்ற கிராமப் புற பிள்ளைகள் நன்றாக படிக்க இயலும் எனவும் அதிலும் பெண்களாகிய எங்களுக்கு அடுப்பங்கறை தாண்டி அறிவியல் உலகில் உலா வர ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர் இந்த பெண் குழந்தைகள் ! இல்லையென்றால் எங்களின் கல்வி பாதியில் தடைப்படக்கூடும் என்று தெரிவிக்கின்றனர். இவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படும் உடன் நடவடிக்கைகளை அப்பகுதி கிராம மக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.