கும்பகோணம், ஏப். 06 –
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சித்திரை தேரின் திருப்பணி இரு ஆண்டுகளுக்கு பிறகு, ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று, திருத்தேர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புனிதநீர் நிரப்பிய கடத்தை தேரில் ஸ்தாபித்து, திருக்குடைபிடிக்க, ஏராளமானோர் திரண்டு வடம் பிடிக்க, தேரோடும் வீதிகளில் திருத்தேரின் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து வரும் சித்திரை பெருவிழாவின் போது வரும் 18ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை, தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும், இது அறுபது தமிழ் வருட தேவதைகளையும், அறுபது படிக்கட்டுகளாக அமைய பெற்ற கட்டு மலைக் கோயிலாகும், இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து அவர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம் மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்
இத்தகைய பெருமைமிகு தலத்தில், கார்த்திகை மற்றும் சித்திரை என இரு பெரும் மரத்தேர்கள் உள்ளது, இதில் 23 டன் எடையுடன் 13.25 அடி அகலமும், உயரமும் கொண்ட சித்திரை தேர் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 25 அடியாக இருக்கும், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சிதலமடைந்ததால், சித்திரை தேரோட்டத்தின் போது மரத்தேருக்கு பதிலாக கட்டுத்தேரில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது இந்நிலையில், இத்தேர் திருப்பணி ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் இரு ஆண்டுகளாக சிவகங்கை காரைக்குடி ராதாகிருஷ்ணன் ஆசாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்பணி முழுமையாக நிறைவு பெற்றது
இதனையடுத்து, இன்று தேர் மலர் மாலைகளால அலங்கரித்து, புனித நீர் நிரப்பிய கடத்தை தேரில் எழுந்தருள செய்து, அதற்கு திருக்குடை பிடிக்க, ஏராளமானோர் திரண்டு வடம் பிடித்து இழுக்க, திருத்தேரின் வெள்ளோட்டம், கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம் முன்னிலையில் தேரோடும் வீதிகளில் திருத்தேரின் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது இதனையடுத்து இவ்வாண்டு நடைபெறும் சித்திரை பெருவிழாவின் போது வரும் 18ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.