கும்மிடிப்பூண்டி, ஏப். 05 –
கும்மிடிப்பூண்டி அருகே அமரம்பேடு கிராமத்தில் 100 நாள் பணிகளில் ஈடுபட்டிருந்த 49 பேர்களை காட்டு தேனீக்கள் கொட்டியதால் மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளாக பிரித்து தினந்தோறும் ஏரி குளங்கள் கால்வாய் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். இதனால் கால்வாய்கள் குளங்கள் சீரமைக்கப்பட்டு மழைநீர் ஏரிக்கு நீர்வரத்து தடையில்லாமல் வந்து அதன் கொள்ளவுகளை எட்டுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல் காலை 7 மணிக்கு ஊராட்சி செயலாளர் அருள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் முன்னிலையில் 100 நாள் வேலைத் தொழிலாளர்கள் அமரம்பேடு பகுதியில் ஏரிகள் ஓரமாக உள்ள கால்வாய் பதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக காட்டு தேனீக்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களின் முகம் மற்றும் கழுத்துகளில் தேனீக்கள் கொட்டியதால் இதில் 49 பேர்களுக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
இதனை அறிந்த ஊராட்சி செயலாளர் மட்டும் பணித்தள பொறுப்பாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியை மேற்கொண்டனர் விரைந்து வந்த அவசர ஊர்தி மேற்கண்ட அனைத்து நபர்களையும் ஏற்றிக்கொண்டு மாதர்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் நட்ராஜ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் மாதர்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அனைத்து பெண்களுக்கும் முதலுதவிக்கான சிகிச்சை மேற்கொண்டனர். அதில் நான்கு பேருக்கு மட்டும் அதிகமாக வீக்கம் மற்றும் மயக்கம் இருப்பதால் அவர்களை உடனடியாக கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் அதில் ரெஜினா (44)ஒருவர் மட்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.