ராசிபுரம், ஏப். 04 –
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக., தலைமை பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், அவரது மகன் இளஞ்செழியன் ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்து அலுவல் பணி மேற்கொண்டிருந்த வட்டாட்சியரை அடித்தும், தரக்குறைவான கொச்சை வார்த்தைகள் பேசியும், அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் அலுவலர்களை தகாத முறையில் வீடியோ பதிவு செய்தும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியும் நடந்து கொண்டனர்.
அரசு பணி மேற்கொண்டிருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியும், அத்துமீறி நடந்துகொண்ட மேற்படி நபர்களையும் கண்டித்தும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அரசு அலுவலகங்களில் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் காவல்துறை மூலம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை துறை ஊழியர்கள் மற்றும் அனைத்து கிராம உதவியாளர்கள் என 155 பணியாளர்கள் காலை 10 மணி முதல் கண்டன முழக்கம் எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராணி தலைமை வகித்தார்.























