மதுரவாயல். ஏப். 1 –
சென்னை மதுரவாயலில் 25 கிலோ கஞ்சா கடத்தலில் ரவுடியின் கூட்டாளிகள் மூவரை போலீசார் வானகரம் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பரவி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக தமிழக காவல் துறையின் டிஜிபி சைலேந்திரபாபு ஆப்ரேஷன் கஞ்சா 2.0 திட்டத்தின் மூலம் ஒரு மாத காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள கஞ்சா விற்பனையாளர்களை கட்டுக்குள் கொண்டு வர தமிழக காவல் துறையினருக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மதுரவாயலில் பிரபா என்கிற தக்காளி பிரபாகரன் கடந்த 2 நாட்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் 25 கிலோ கஞ்சா கடத்தி வருவதை ரகசியத் தகவல் மூலம் அறிந்த மதுரவாயல் போலீசார் அவனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவருடன் வந்த மேலும் 3 நபர்கள் தப்பி ஓடி விட்டனர். கைது செய்த பிரபாகரன் மீது கொலை கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பி ஓடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்த நிலையில் இன்று மூன்று பேரும் வானகரம் அருகே பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் மூவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின் அவர்களை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த நான்கு பேரும் சேர்ந்து மதுரவாயல், ஆலப்பாக்கம் ,போரூர், நெற்குன்றம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தமாக கஞ்சாவை கடத்தி வந்து அதனைப் பிரித்து சில்லறையாக இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரிடம் விற்பனை கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், இக்குற்றச் செயலின் முக்கிய குற்றவாளி பிரபா என்ற தக்காளி பிரபா, கில்லி என்ற அருண், பாபு என்ற கோழி பாபு, மற்றும் பூங்காவனம் ஆகியோர் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் முக்கிய குற்றவாளியான ரவுடி பிரபாகரன் போலீசார் பிடிக்கும் போது தப்பிச் செல்ல முயன்று அதில் கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 4 பேரையும் போலீசார் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.




















