திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஆட்சியர் பா.முருகேஷ¨க்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊர் நாட்டாமை பரசுராமன் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் மார்கழி மாதம் தொடக்கம் மற்றும் பொங்கல் திருவிழாயை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோயிலில் சுவாமி வீதியுலா நடைபெறும். மேலும் மஞ்சுவிரட்டும் நடத்தப்படும். நூற்றாண்டை கடந்து மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது. கடலாடி, கீழ்பாலூர், மேல்சோழன்குப்பம், வீரளூர் மற்றும் ஆதமங்கலம்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100 காளைகள் பங்கேற்கும். பாரம்பரியமாக நடத்தப்படும் அம்மன் கோயில் சுவாமி வீதியுலா மற்றும் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சுவிரட்டு திருவிழாவை காணவரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றனர்.