திருவண்ணாமலை மார்ச். 8 –
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அந்நிறுவன முகவர் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் ஆரணி வட்டம் சதுப்பேரிபாளையம் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் கடந்த 2013-ம் ஆண்டு ஆர்.ஜி.என். டைரி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தில் தான், ஏஜென்டாகவும், பாலிசிதாராகவும், இருந்து வந்தேன். மேலும், இந்த நிறுவனத்தில் சுமார் 200 நபர்கள் ஏஜெண்டாக உள்ளனர். நாங்கள் அனைவரும் சேர்ந்து பொதுமக்களிடம் பாலிசி எடுத்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்து மேற்படி நிறுவனத்தில் கட்டியுள்ளோம்.
மேற்படி நிறுவனத்தை நிர்வாகம் செய்து வரும் முத்துக்குமரன், பாண்டியன், ரவி, பெரியதம்பி மற்றும் சில நபர்கள் நாங்கள் பொதுமக்களிடம் வசூல் செய்து கொடுத்த பாலிசி பணத்தை திருப்பி கேட்ட போது எங்களுக்கு பணத்தை தராமல் எங்களை அலைகழிக்கின்றனர்.
இதுக் குறித்து, பலமுறை அவர்களிடம் கேட்டும் பணத்தை தர மறுத்து வருகின்றனர். எங்களிடம் பணம் கட்டிய பொதுமக்கள் பணத்தை கேட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள், எனவே மேற்படி எதிரிகளிடமிருந்து நாங்கள் கட்டிய பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆர்.ஜி.என். டைரி இந்தியா லிமிடெட் தமிழகம் முழுவதும் 5 வருடத்தில் பணம் இரட்டிப்பு ஆகும் என ஆசை வார்த்தைகளை கூறி பொது மக்களிடம் பல கோடி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக கண்ணபிரான் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.