திருவாரூர், செப். 17 –
தமிழ் தென்றல் என்று பெருமையாக அழைக்கப்படும் திரு.வி.க அவர்களின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் ஆவார்.
சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் திரு.வி.க. சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். இவரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரு.வி.க மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.





















