திருவள்ளூர், பிப். 6 –
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த 28 மாணவர்கள் 2021- 2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வெழுதி அதில் தமிழக அரசின் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி மருத்துவப் படிப்பு பயில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையார்குப்பம் கிருபானந்தவாரியார் அரசு மேல் நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 பயின்ற மாணவர்கள் எஸ்.எல். சுதாகர், எஸ்.சத்யா, ஆகிய இருவர் தமிழக அரசின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி பல்மருத்துவம் மற்றும் பொது மருத்துவப் படிப்பிற்கும், பி.கிரிதரன் என்ற மாணவர் மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பு பயில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இம்மாணவர்களை வாழ்த்தும் விதமாகவும் அம்மாணவர்கள் மருத்துவம் படிப்பு பயில உறுதுணையாக இருந்து கல்வி போதித்து ஊக்கப்படுத்திய அரசு தலைமையாசிரியர் லோகுநாத், துணை தலைமையாசிரியர் பி.எஸ்.கார்த்திகேயன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக அவ்வூர் மக்கள் அப்பள்ளியில் விழா எடுத்து பாராட்டிக் கொண்டாடினார்கள்.





















