கன்னியாகுமரி, நவ. 15 –

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க க்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் கடந்த நவ 7 முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று ஒன்பதாவது நாளாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்வகோவில், தோவாளையில் உள்ள பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை பார்வையிட்டு,ஆய்வு செய்தார். மேலும் தோவாளை, தனியார் திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதாற்காக தற்காலிக அமைக்கப்பட்டுள்ள நிவரணமுகாமில் தங்கியுள்ள சுமார் 75 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிவாரண முகாமில் அமைக்கப்பட்டுள்ள்ள சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிட்டு மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தோவாளை வட்டம் தேரேகாலில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கால்வாய் கரை உடைப்பு மற்றும் சாலை சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆய்வு மாளிகையில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம், புறக்கின்காலையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மாவட்ட நிர்வாகத்தால் மேற் கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் வெள்ளப் பாதிப்புகளை துரிதமாக சீர் செய்திடவும், நோய் தொற்று ஏற்படா வண்ணம் தூய்மைப் பணிகளை மேற் கொண்டு சுகாதாரத்தை பேணிக் காத்திடவும், பாதிக்கப் பட்ட மக்களுக்க்கு உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை எவ்வித குறைபாடுகளின்றி வழங்கிடவும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் மாநகராட்சி பகுதிகளில் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற் கொள்ளப்பட வேண்டி நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார்.

பின்னர் மேலாங்கோட்டில் மழை வெள்ளத்தல் பாதிக்கப்பட்டுள்ள வா.ஐப் பயிர் பயிரிடப்பட்டுள்ள நிலங்களை முதலமைச்சர் பார்வையிட்டு பயிர் சேத விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

இறுதியாக கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயிலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமார், என். தளவாய் சுந்தரம், எம்.ஆர். காந்தி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலந்திரபாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here