ஸ்ரீபெரும்புதூர், ஜன. 25 –
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் நகரின் புறவழி சாலையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது நெடியுயர்ந்த தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவகத்தின் உள்ளே பொதுமக்கள் எவரும் எளிதாக உள்ளே செல்ல முடியாது. நேரம் கடந்து உள்ளே செல்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ராஜீவ்காந்தி நினைவகம் உள்ளே கட்டுப்பாடுகளை மீறி உள்ளே சென்ற இரண்டு வட மாநில இளைஞர்கள் ஃபுல் போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதைக் கண்ட மத்திய பாதுகாப்பு படையினர் சண்டை இட்டுக் கொண்ட இரண்டு வடமாநில இளைஞர்களை கெஞ்சிக் கூத்தாடி வெளியே அனுப்பி வைத்தனர்.
மிகவும் தள்ளாடியபடியே வந்த இரண்டு இளைஞர்களும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள நினைவகத்தின் பிளாட்பார்மில் மீண்டும் கட்டிப்பிடித்து சண்டையிட்டனர்.
அந்த தேசிய நெடுஞ்சாலையில் நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்ற சூழ்நிலையில் இவர்கள் கட்டி புரண்டு சண்டையிட்ட காட்சியைக் கண்ட பலர் வாகனத்தை நிறுத்திவிட்டு சண்டைக் காட்சியை படம் பிடித்தனர்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு அதிகம் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் உள் பகுதிலேயும், வெளியேயும் முழு மது போதையில் இரண்டு வாலிபர்கள் அரை நிர்வாணத்துடன் சண்டையிட்டதை கண்ட சமூக ஆர்வலர்களுக்கு ஆச்சரியம் மேலிட்டது.
முழு போதையில் உள்ள வாலிபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் எப்படி நினைவகத்தின் உள்ளே அனுமதித்தார்கள். இவ்வளவு கவனக்குறைவாக பாதுகாப்பு இருந்தால் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.