சாலையில் ஓடும் சாக்கடை நீர், ஓராண்டுக்கும் மேல் அதற்கு தீர்வுக் காணப்படாமல் கடந்து சென்று சாதனைப்படைத்து வரும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும் அச்சாலையில் செல்வதற்கே முகம் சுளித்து செல்லும் அவலநிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை, டிச. 9 –
திருவள்ளூர் மாவட்டம் ராகிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வி. புதூர் இக்கிராமத்தில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் கழிவுநீர் தகுந்த கழிவுநீர் வடிகால்வாய் இல்லாமல் தெருக்களில் வாசனையையும், நோயையும் மற்றும் விபத்துக்களையும் ஏற்படுத்தும் விதமாக ஓராண்டுக்கும் மேலாக யாரும் கேட்பாரற்று வற்றாத ஜீவ நதி போல் மழை வெயில் என கருதாமல் அனைத்துக் காலத்திலும் தெருக்களில் பாய்ந்தோடுகிறது.
இப்பிரச்சினைக் குறித்து பல முறைகளுக்கும் மேலாக ஆர்.கே.பேட்டை ஊராட்சியில் பொதுமக்கள் சார்பில் புகார் மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்கவில்லை என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஓராண்டுக்கு முன் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் இப்பிரச்சினைக் குறித்து கொண்டு சென்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆர்.கே.பேட்டை ஊராட்சி வி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள நடுத்தெரு, நாயுடு தெரு, மற்றும் உடையார் தெருக்களில் சாலைகளில் வடிந்தோடும் சாக்கடை நீரால் கொசுக்கள் உற்பத்தி மற்றும் துற்நாற்றம் நோய் தொற்று ஏற்படும் அபாயங்கள் உள்ளதாகவும், அடிக்கடி அவ்வழி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, சாலையில் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் ஒரு உள்ளாட்சி நிர்வாகத்தால் மக்கள் வாழும் பகுதியில் அடிப்படை சுகாதார வசதிகளையே ஏற்படுத்தி தர ஓராண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டும் எனில், இக்கிராம பொருளாதாரம், கல்வி, மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்கள் கவனம் செலுத்தி எப்போது செய்து இக்கிராமத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வார்களோ என எண்ணற்றக் கேள்விகள் எங்களுக்குள் எழுகிறது என்கிறார்கள். தயவு செய்து இனியும் உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் உரிய உடனடியாக கவனம் செலுத்தி அதற்கான நிதி ஒதுக்கி கழிவுநீர் வடி கால்வாயை அமைத்துத் தரும்படி ஊராட்சி தலைவர் மற்றும் செயலருக்கும் தெரிவித்துக் கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.