டெல்லி, ஜன. 16 –

தற்சார்பு இந்தியா, எதிர்காலத்துக்கான தூய மற்றும் பசுமை தேவைகள் என்ற பிரதமரின் தொலை நோக்கை,  அடைய வேண்டும் என  மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே கூறியுள்ளார்.

அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நிலக்கரியிலிருந்து மெத்தனால் எடுக்கும் நாட்டின் முதல் ஆலையை மத்திய அமைச்சர் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதை   பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் (பெல்) உருவாக்கியது.  காணொலி காட்சி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், பெல் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் நலின் சிங்கால், கனரக தொழில்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ஜித்தேந்திர சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே பேசியதாவது: .

தற்சார்பு இந்தியா மற்றும் எதிர்காலத்துக்கான சுத்தமான, பசுமையான தேவைகள் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கை நாம் அடைய வேண்டும்.  இந்த தொலைநோக்கை அடைவதில், உற்பத்தி துறையின் பங்கு முக்கியமானது. மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் உற்பத்தி துறையின், முக்கியத்துவத்தை அரசு ஏற்கனவே எடுத்து கூறியுள்ளது. மூலதன பொருட்கள் தொழில்துறை, உற்பத்தி துறையின் முதுகெலும்பாக உள்ளது.

மிகப் பெரிய பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாக உள்ள பெல் நிறுவனத்தின் பங்கு, அரசின் தொலைநோக்கை நிறைவேற்றுவதில் மிக முக்கியமானது.  சமீபத்தில் முடிவடைந்த சிஓபி26 கூட்டத்தில்,  பிரதமர் அறிவித்த இந்தியாவின் பருவநிலை உறுதிகளை நிறைவேற்ற தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் பெல் நிறுவனம் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் மகேந்திர நாத்  பாண்டே கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here