திருவண்ணாமலை, ஜூலை.26-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் சி.இறையருள் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் சி.இறையருள் தலைமையில் சங்க நிர்வாகிகள் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கியதோடு திருக்குறள் புத்தகம் வழங்கி கௌரவித்தனர்.
அப்போது சங்கத்தின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று முதமைச்சரிடம் வழங்கப்பட்டது அதில் உலக பழங்குடி தினமான ஆகஸ்டு 9 தமிழகத்தில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் பழங்குடி மக்களுக்கு மற்ற சாதிகளுக்கு உள்ளதுபோல தமிழகத்தில் மாநில பழங்குடி நல ஆணையம் அமைக்கப்பட வேண்டும். தனி அரசு செயலர் நியமிக்க வேண்டும். பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக ஐஏஎஸ் அகாடமி உருவாக்கிட வேண்டும். ஆந்திரா கேரளாவில் உள்ளதுபோல பழங்குடி இன மக்களுக்காக தனியே ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கிட வேண்டும்.
மானுடவியல் வல்லுநர் விசாரணையின் அடிப்படையில் பழங்குடி சாதிச்சான்று வழங்கப்பட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவினை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழங்குடி இன மக்களின் கோரிக்கைகளுக்கு இந்த அரசு தனி கவனம் செலுத்தும் என தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது மாநில செயலாளர்கள் மருத்துவர் கரிப்பூர் பி.ஏழுமலை, பி.ஜானகிராமன், மாநில துணை செயலாளர் பா.குகன், மாநில துணை பொருளாளர் எஸ்.சங்கர், அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத் தென்மண்டல தலைவர் கே.கேசவன் ஆகியோர் உடனிருந்தனர்.