ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் நஜியா மெட்ரிக் பள்ளி , தேவிபட்டினம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, வெண்குளம் ஷிபான் குளோபல் அகாடமி, உச்சிப்புளி நேஷனல் அகாடமி, ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலா, பெருங்குளம், புதுவலசை அரசு உயர்நிலைப் பள்ளி, அழகன்குளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பிரச்னைக்களுக்கான தீர்வு, பேரிடர் மற்றும் விபத்து கால மீட்பு, விவசாய உபகரணங்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் எரிபொருள் தயாரிப்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றன.
காரைக்குடி அழகப்பா பல்கலை., மண்ணியல் துறை தலைவர் ஆர்.கரிகாலன் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். அவர் கூறுகையில், பேரிடர் கால மீட்பு, விவசாய சாதனங்கள், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டில் புதிய பரிணாமங்கள் பாராட்டுக்குரியது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த மண்ணில் மாணவ, மாணவியரின அறிவியல் புதிய கண்டுபிடிப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றார். பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரித்த நஜியா மெட்ரிக்., பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல் பரிசு வென்றனர். நுண்ணோக்கியின் புதிய பரிணாமம் படைப்பிற்கு கிருஷ்ணா மெட்ரிக்., பள்ளிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. கழிவுநீர் மேலாண்மை படைப்பிற்கு நேஷனல் அகாடமிக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் பள்ளி நிறுவனர் கலிபுல்லாஹ் கான்,
தாளாளர் பவுசுல் ஹானியா, துணைத்தலைவர் முகமது ஷராபத்துல்லாஹ், சைடெக் கம்ப்யூட்டர் நிர்வாகி ரியாஸ் அஹமது, ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூன், மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், குழந்தை நல பாதுகாப்பு அலகு அலுவலர் சித்ரா தேவி,
சரஸ்வதி வித்யாலயா நிர்வாக அதிகாரி ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.