நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. அந்த சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு கேட்போம்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் நபராக நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். எங்கள் அணிதான் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப் படும். மக்களுக்கு வேலைக் காரனாக உள்ள என்னிடம் அதிகம் எதிர் பார்க்கிறார்கள். அதை நிச்சயம் நான் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நாகர் கோவிலில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜான் தங்கம் (மேற்கு), அவைத் தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் சிறப்பாக பணி புரிந்து பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகளை பெற்று தரும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 5 பவுன் தங்க சங்கிலி பரிசாக வழங்கப் படும். 2-வது இடத்தை பிடிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 3 பவுன் தங்க சங்கிலி, 3-வது இடத்தை பிடிப்பவருக்கு 1 பவுன் மோதிரமும் வழங்கப் படும் என்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தெரிவித்து உள்ளார்.