பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந் நிலையில் அதிமுக, இவ் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ் விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப் படுகிறது.
இந் நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அதிமுகவுக்கு அவப் பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேச தயாராக இருக்கிறார்கள்.
குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை. அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து ஒருவர் நீக்கம் செய்யப் பட்டுள்ளார். எந்த ஒரு விசாரணைக்கும் நானும், என்னுடைய குடும்பமும் தயார் என கூறியுள்ளார்.