கும்பகோணம், செப். 11 –
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தூய்மை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் சிலர், உள்நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு டிரிப்ஸ் போடுவது, டிரிப்ஸ் மாற்றுவது ஆகிய செவிலியர்கள் செய்யக்கூடிய பணிகளை இவர்கள் கையாளும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கும்பகோணம் அண்ணலக்ர ஹாரம் ஊராட்சிக்குட்பட்ட வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கண்மணி மகன் சக்திவேல் (29) உடல் நலக்குறைவால் இவர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று முன் தினம் மாலை பரிசோதனை செய்ததை தொடர்ந்து அவர் தொடர்ந்து சிகிச்சை பெற உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட போதே செவிலியருக்கு பதிலாக, மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த பணியாளர்களில் ஒருவரான பெண் பணியாளர் அவருக்கு டிரிப்ஸ் போட்டுள்ளார், பின்னர் டிரிப்ஸ் முடிந்து அடுத்த பாட்டிலை மாற்ற ஆண் ஒப்பந்த பணியாளர் வந்து அவர் செவிலியர் செய்யும் பணியை செய்ய தொடங்கிய போது, டிரிப்ஸ்சை சரியாக லாக் செய்யாததால், நோயாளி சக்திவேலின் கையில் இருந்து இரத்தம் டிரிப்ஸ் மூலம் ரிட்டன் ஆவது கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார்.
இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர், சக்திவேல், தாம் இங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றால் நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அஞ்சி, அங்கு சிகிச்சை பெற விரும்பவில்லை என கூறி, டிஸ்சார்ஜ் மெமோ வாங்கிக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார்.
தற்போது, சுகாதார பணி மற்றும் தூய்மை பணியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்டவர்களே இங்கு இதுப்போன்ற மருத்துவ சேவைகளை செய்து வருகின்றனர். இதனால் இச்செயல் இங்குள்ள நோயாளிளையும், மருத்துவமனைக்கு வரும் பொது மக்களையும் பெரும் அச்சமடைய செய்துள்ளது.
தற்போது இது தொடர்பான காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சுகாதாரப்பணி உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இத்தகைய மனித உயிர்களோடு விளையாடும் விபரீதங்களை இனியும் தொடர விடாமல் தடுத்து நிறுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















