ஆம்பூர்:

ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி அகல்யா. இவர் தற்போது ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் 8-ம் வகுப்பு வரை பெத்லகேம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தார்.

சிறு வயது முதலே தனக்கு கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கத்தை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் உண்டியல் மூலம் சேமித்த பணம் மற்றும் பெற்றோர் அளித்த நிதியுதவியுடன், தான் படித்த நகராட்சி பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ‘ஸ்மார்ட்’ போர்டு ஒன்றை பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு நன்கொடையாக அகல்யா வழங்கினார்.

அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ.சத்தியகுமார், ஆசிரியர்கள் அமர்நாத், சரவணன், ஜெயசீலன், சரண்யா, சங்கீதா, ஜெயபாரதி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். ‘ஸ்மார்ட்’ போர்டை மாணவி அகல்யா மற்றும் அவரது பெற்றோர் தண்டபாணி- தாமரைசெல்வி ஆகியோர் திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து ‘ஸ்மார்ட்’ போர்டு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது.

தான் சேமித்த உண்டியல் பணம் மற்றும் பெற்றோர் உதவியுடன் ‘ஸ்மார்ட்’ போர்டை அவர் படித்த பள்ளிக்கு வாங்கி கொடுத்த மாணவியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

ஸ்மார்ட் போர்டு வழங்கியது குறித்து மாணவி கூறியதாவது:-

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட்டு கல்வி கற்று தருகின்றனர்.

இந்த நகராட்சி பள்ளியில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் ஏழை மற்றும் அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், இவர்களும் இன்றைய தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய கல்வியை பெற வேண்டும் என நினைத்தேன்.

அதன் காரணமாக என்னிடம் இருந்த சேமிப்பு தொகையான ரூ.50 ஆயிரத்தை செலவிட்டு நான் படித்த இந்த பள்ளிக்கு நவீன தொடுதிரையை வழங்கியதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here