பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுங்கட்சியாக உள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-பாஜக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக சில மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி சார்பில் போட்டியிட ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் முயற்சித்து வந்தனர்.
இந்த முயற்சிக்கு மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா முன்னர் ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இதனால், 2019-பாராளுமன்ற தேர்தலில் இந்த மூன்றாவது அணி என்பது மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேவேகவுடா, ‘மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும்.
மதச்சார்பற்ற சக்திகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையில் இன்னும் ஒருவாரம் அல்லது 10 நாட்களில் எங்களுக்குள் தொகுதி உடன்பாடு கையொப்பமாகி விடும்’ என தெரிவித்தார்.