திருவனந்தபுரம்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது.
ராணுவத்தின் விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தனர். சில மணி நேரங்களில் நடந்த இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடந்த துல்லிய தாக்குதலுக்கு கேரளாவைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கனூரை அடுத்த பாண்டநாடு கிராமத்தைச் சேர்ந்த ஏர்மார்ஷல் ஹரிகுமார், கண்ணூர் மாவட்டம் கடச்சிராவைச் சேர்ந்த ஏர்மார்ஷல் ரகுநாத் நம்பியார் இருவரும் இந்திய ராணுவத்தின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளின் கண்காணிப்பை மேற்கொண்டு வந்தனர்.
பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க உத்தரவு கிடைத்ததும், அதனை மிகவும் சாமர்த்தியமாக நடத்திக்காட்டி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
ஏர்மார்ஷல் ஹரிகுமார், 1979-ம் ஆண்டிலிருந்து விமானப்படையில் பணியாற்றி வருகிறார். பரம் விஷிஸ்டு சேவா மெடல், அதி விஷிஸ்டு சேவா மெடல், வாயுசேனா மெடல், விஷிஸ்டு சேவா மெடல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
ரகுநாத் நம்பியார், 1981-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேஷனல் டிபென்ஸ் அகாடமியில் படித்து ராணுவத்தில் இணைந்தவர் ஆவார்.