சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளர் பொறுப்பில் உள்ள ராஜகோபாலின் தாயார் சரஸ்வதி உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவரைக் கவனித்துக் கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் 7 பேர் 12 மணி நேரம் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை மீறி முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்களை, இதுபோன்ற முக்கியப் பிரமுகர்களை கவனிக்க நியமித்ததை எதிர்த்த மருத்துவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் தாயார் ராஜ்பவனுக்கு உடல்நலம் தேறிய நிலையில் சென்றுவிட்டார். அங்கும் அவரைக் கண்காணிக்க மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை உத்தரவிட்டது.

ஆனால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ராஜ்பவனுக்கு செல்ல முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதால், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை ஆளுநர் மாளிகை மிரட்டி வருவதாகத் தெரிகின்றது. ராஜ்பவனுக்கு ஆளுநரின் செயலாளர் தாயாரைக் கவனிக்கச் சென்ற இன்னொரு மருத்துவரை, வேறு ஒருவர் வரும்வரை வெளியே விட முடியாது என்று தடுத்து வைத்திருந்ததால் மருத்துவர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.

ஆளுநர் மாளிகையின் அதிகார அத்துமீறலும், மருத்துவர்களை மிரட்டும் போக்கும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. மருத்துவர்களை, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிபணிய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை நினைப்பது தவறான முன்னு தாரணத்தை உருவாக்கிவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here