மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
சீர்காழி அருகே அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற இருந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. மேலும் இன்று மாலையில் இருந்து அரசு மதுபான கடை அக்குறிப்பிட்ட பகுதியில் இயங்காது எனவும், நாளை முதல் அரசு மதுபான கடை இடமாற்றம் செய்யப்படும் எனவும் அரசு தரப்பிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைப்பெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் சமூகமான உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, அப்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இரு தரப்பினர்களின் சார்பில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சீர்காழி பிரதான சாலையில் அரசு மதுபான கடை தாழந்தொண்டி அருகே இயங்கி வருகிறது. இந்த மதுபான கடை அருகே பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதாகவும் இந்த மதுபான கடைக்கு மது அருந்த வரும் மது பிரியர்கள் மது போதையில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை கிண்டல் செய்வதாகவும், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுவதாகவும் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள இந்த மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி கடந்த ஜனவரி மாதம் முற்றுகையிட்டு, சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
அப்பொழுது பேச்சு வார்த்தையில், ஈடுபட்ட சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, பிப்ரவரி மாதம் இருபதாம் தேதிக்குள் மதுபான கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது வரை அரசு மதுபான கடை இடமாற்றம் செய்யாமல் அங்கேயே இயங்கி வருவதாக கூறி இன்று அரசு மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதனை அடுத்து தாழந்தொண்டி, வழுதலைக்குடி, திருமுல்லைவாசல், பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். அரசு மதுபான கடையை பூட்டு போட ஒன்று திரண்டனர்.
இந்நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெனிடா மேரி வட்டாட்சியர் இளங்கோவன் அரசு மதுபான மாவட்ட மேலாளர் சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோர் தலைமையில் திடீரென அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கடையை மாற்ற கோரி அனுமதி பெற்று நாளை முதல் வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என எழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
மேலும் அதுவரையில் எந்தவித சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் அப்பகுதி மக்கள் பிரச்சினைகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.






















