சென்னை, ஜன. 14 –

தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அவர்கள் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அதனை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதுப்போன்று இந்த ஆண்டும் காவல்துறையில் ( ஆண், பெண் ) காவலர் நிலை – 2, மற்றும் 1, மேலும் தலைமைக்காவலர், ஹவிஆஃதார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் உள்ள 3 ஆயிரம் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் ( சிறப்பு நிலைய அலுவலர் ) யந்திர கம்மியர் ஓட்டி ( சிறப்பு நிலைய அலுவலர் ) போக்குவரத்து மற்றும் தீயணைப்போர் ( தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர் ) ஆகிய நிலைகளில் உள்ள 118 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் ( ஆண் ) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் ( ஆண், பெண் ) நிலைகளில் 60 பேர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கிடுமாறு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ. 400 பிப் 1 ஆம் தேதி 2023 முதல் வழங்கப்படும் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், காவல் வானொலிப் பிரிவு, மோப்பநாய் படைப்பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் உள்ள இரண்டு நபர்களுக்கென ஆக மொத்தம் ஆறு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பதக்கம் வழங்கிடவும் முதலமைச்சர் ஆணைப்பிறப்பித்துள்ளார்.

மேலும் இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும் எனவும், மேலும், அவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைப்பெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடனான பதக்கச்சுருள் வழங்கப்படும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here