சென்னை, அக். 26 –
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் உளவுத்துறையினர் கடந்த 23ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பிரிவில் உள்ள கழிவறையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பாலிதீன் பை கிடந்தது. சந்தேகத்திற்குரிய அந்தப் பையை சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட தங்கத்தகடுகள் கார்பன் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து 1.8 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.87.82 லட்சம். சுங்கச் சட்டத்தின் கீழ் இது பறிமுதல் செய்யப்பட்டது.
ஷார்ஜாவிலிருந்து சென்னைக்கு நேற்று காலை வந்த இரு விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 7 தங்கப்பொட்டலங்கள் அவர்களது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து 1.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.71.72 லட்சம். இந்தக் கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது என சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.