சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
முன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.
இதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.