பொன்னேரி, ஆக. 21 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் மஞ்சகரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு இலவச பொது மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் நல்வாழ்வுத்துறை மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமில் அப்பகுதியினைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அம்மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொது மருத்துவ சிகிச்சைகள், ரத்தப் பரிசோதனை, உயர் கருவிக்கொண்டு பல் பரிசோதனைகள் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் வழங்கினார்கள்.
மேலும் அம்முகாமில் சிகிச்சைகள் பெற்ற பயனாளிகளுக்கு, உயர் ரக மருந்து மற்றும் மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் தொடர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவபயனாளிகளை வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு அனைத்து வித பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சோம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம் துவக்கி வைத்த இந்த முகாமினை வெல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் குமுதா லிங்குராஜ், உதவி மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் தேவ் ஆகியோர் ஆலோசனையின் படி முகாம் திட்ட மேலாளர் ஜானகிராமன் மற்றும் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.




















