கும்பகோணம், டிச. 15 –
கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா நகர் 15வது குறுக்கு தெருவில் துபாயில் பணிபுரியும் சாகுல் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் மூன்று வருடங்களாக காவலராக பணிப்புரிந்து வருகிறார். சென்னையில் உள்ள கட்டிட பொறியாளர் ஜாவித் என்பவரின் மேற்பார்வையில் பணிபுரிந்து வந்தார். இதற்கு முன்பு 22 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். எனவே தற்போது கடந்த 5 வருடமாக மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்பகோணத்தில் வசித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஜாமியா நகரிலுள்ள கட்டிட வேலை நடைபெறும் வீட்டில் மர்மமான முறையில் தலையில் ரத்த காயங்களுடன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுவாமிமலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன ஜெயராமன் உடல் இரண்டு நாட்களாக அந்த வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.