கும்பகோணம், ஏப். 29 –

ஆசியக் கண்டத்திலேயே 53 அடி உயரம், 19 டன் எடை, 400 சிற்பிகளின் பத்தாண்டு கால உழைப்பு போன்ற சிறப்புக்களைக் கொண்ட ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் தமிழ் பெண் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அடைக்கலமாதா திருவுருவச்சிலை நாளை திருகாவலூரில் திறக்கப்படுகிறது.

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில், 53 அடி உயரத்தில், 19 டன் எடையில், தென்னிந்திய கலை அம்சத்துடன், முற்றிலும் தமிழ் பெண்ணை போல ஆடை, ஆபரணங்கள் பூட்டிய அடைக்கலமாதா பிரமாண்டமான வெண்கல சிலை ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில், சுவாமிமலையை சேர்ந்த சிற்பி சி எம் பிரவீன் தலைமையிலான 400 சிற்பிகளில் பத்தாண்டு கால உழைப்பில் உருவாக்கம் ! வீரமாமுனிவர் கட்டிய அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி ஊராட்சி திருகாவலூரில் அமைப்பு ! நாளை 30ம் தேதி திறப்பு விழா காணும் இப்பிரமாண்டமான அடைக்கலமாதா சிலை குறித்த செய்தி தொகுப்பு

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி, திருக்காவலூரில் அமைந்துள்ள அடைக்கல அன்னை திருத்தலம், வீரமாமுனிவரால் தோற்றுவிட்டப்பட்ட புனித தலமாக போற்றப்படுகிறது. பழமையும், பெருமையும் கொண்ட இப்புனித தலத்தின் பங்கு தந்தை சுகக்கின், உதவி பங்கு தந்தை இன்பன்ராஜ் ஆகியோர் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் அன்னையின் வெண்கல சிலையினை அமைக்க திட்டமிட்டனர். இதற்காக குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமியை சந்தித்தும் ஆலோசனையும், அறிவுரையும் பெற்று, இதற்கான பணிகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு இச்சிலை செய்யும் பொறுப்பினை புராதன சின்னங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர் என போற்றப்படும் சுவாமிமலையை சேர்ந்த சிற்பி சி எம் பிரவீன் என்பவரிடம் ஒப்படைத்தனர்.

முதலில் இதனை 120 அடி உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் அங்குள்ள மண்ணின் உறுதிதன்மை மற்றும் ஸ்திரதன்மை ஏற்புடையதாக இல்லாததால், 18 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது,  53 அடி உயரத்தில் குறைத்து வடிவமைக்க முடிவு செய்து சிற்பி பிரவீன் தலைமையில், 400க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உழைப்பில் 19 டன் எடையில் ஆசியாவின் மிகப்பெரிய அடைக்கல மாதாவின் வெண்கல சிலை ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் உருவானது.

வரலாற்று சிறப்புமிக்க, மிக பிரமாண்டமான அடைக்கலமாதா சிலையினை வடிவமைத்த சிற்பி சி எம் பிரவீன், கன்னியாகுமரி மாவட்டம்  சிதறால் கிராமத்தில் செல்லப்பன் மேரி தம்பதியினருக்கு மகனாக 27.12.1977 ல் பிறந்தார், கும்பகோணம் கவின் கலைக்கல்லூரியில், 1996 முதல் 2003 வரை சிற்பகலை பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து அதே கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராக எட்டு ஆண்டுகள் பணியாற்றி பின்னர் சுவாமிமலையில், சிற்ப கூடம் அமைத்து தொழில் செய்து வருகிறார்.

இதன் மூலம் பல நூறு சிலைகள் செய்து, பல்வேறு கலைவளர்மணி விருது, உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு, தனியார் விருதுகளும் பெற்றுள்ளார் இவருக்கு செல்வ மலர்விழி என்ற மனைவியும், ஆருஷ்பெர்னோ என்ற மகளும் உள்ளனர்.

இப்பிரமாண்டமான அடைக்கலமாதா சிலை, இச்சிலைக்கு மாடல் அமைத்து, அதில் அச்சு எடுத்து, பின்னர் மண்கட்டி, வார்ப்பு மோல்டு தயார் செய்து, இச்சிலை தனித்தனியாக 380 பாகங்களாக பிரித்து வார்ப்பு செய்து, ராவி, சீவுதல், முறையாக தென்னிந்திய கட்டிட கலை பாணியில், வெண்கல வார்ப்புடன் உருவாக்கப்பட்டது, முற்றிலும் தமிழ் பெண் அழகு அமைப்பில், 12 விண்மீன்கள், முடியுடன் அணிகலன்கள், ஜெபமாலை, உத்ரியம் மற்றும் காதணியுடன் நேர்த்தியாக நானூற்றுக்கும் மேற்பட்ட சிற்பிகளின் 10 ஆண்டு கால உழைப்பின் பலனாக இச்சிலை இன்று உயர்ந்து நிற்கிறது

ஆசியாவின் மிகப்பெரிய அடைக்கலமாதா சிலை, நாளை 30ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் இராயப்பன் ஆகியோர் ஆசி வழங்க, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., (சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி), சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் தங்களது திருக்கரங்களால் திறந்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here