புதுக்கும்மிடிப்பூண்டி, ஜன. 22 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள புதுக் கும்மிடிப்பூண்டி நகர பகுதிகளில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இப்பிரச்சினைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்டதும், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததுமான திருக்கோவில்கள் இப்பகுதியில் உள்ளது.
இதில் பாலீஸ்வரன் கோவில், சந்திரசேகர சுவாமி கோவில், சன்ன கேசவ பெருமாள் கோவில், மற்றும் அருள்மிகு ஸ்ரீஎல்லையம்மன் கோவில். உள்ளிட்ட நான்கு கோவில்கள் அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் எதிர் வரும் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது. மேலும் அதற்கான திருக்கோயில் திருப்பணிகளும் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இத்திருக்கோயிலில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடைப்பெற்றுவுள்ளதாகவும், மேலும் அத்தகவல் குறித்து மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கப்படும் என்றும், தொடர்ந்து இப்பிரச்சினையில் இத்திருக்கோயிலின் தர்மகர்த்தாவை காப்பாற்றி வரும் நபர் யார் என்ற கேள்விகளை எழுப்பும் வகையில் வாசகங்கள் பொறிக்கப்பட்டதும், மற்றும் அப்போஸ்டரில் எந்தவித விலாசம் மற்றும் இப்போஸ்டர் அச்சடிக்கப்பட்ட அச்சகம் எதுவென்றும் தெரிவிக்கப்படாத போஸ்டர்களை, நேற்று இரவோடு இரவாக புது கும்முடிபூண்டியின் முக்கிய நகரப் பகுதிகளில் உள்ள சுவர்களில் ஓட்டப்பட்ட சுவரொட்டிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இச்சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சுவரொட்டி தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் பல சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதப் பொருளாக மாறி உள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில், கோவில் நிர்வாகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

























