சென்னை, டிச. 15 –
கொலை செய்யும் நோக்கத்தோடு தொழில்நுட்ப உதவியுடன் போலீசில் மாட்டாமல் சுற்றித் திரிந்த சிறுவன் உட்பட ஐந்து பேர் கொண்ட பலே கில்லாடி கும்பலை சைபர் கிரைம் உதவியுடன் சென்னை கண்ணகி நகர் சரக போலீசார் கைது செய்தனர்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கடந்த ஜீன் மாதம் 26ம் தேதி கொலை செய்யும் நோக்கத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவ்வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.
இந்நிலையில் கண்ணகி நகர் போலீசார் தனிப்படை அமைத்து விழுப்புரம், தர்மபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தேடியும் கிடைக்கவில்லை. செல்போன் எண்ணை டிராக் செய்ய முடியாமல் போனதால் கண்ணகி நகர் போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடினர்.
சைபர் கிரைம் போலீசார் அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்தும், தொழில்நுட்ப முறையிலும் தேடி வந்த போது அவர் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் எண்களை பணம் கொடுத்து வாங்கி பலரை மிரட்டி பணம் பறித்தும், கஞ்சா விற்பனையிலும் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
மேலும் தலைமறைவு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி பிரியாவுடன் முறையற்ற உறவில் இருந்த மாம்பாக்கத்தை சேர்ந்த சேகர்(எ) நாய் சேகரை கொலை செய்ய திட்டம் தீட்டி சுற்றிவந்ததை போலீசார் தெரிந்து கொண்டனர்.
தீவிரமாக தேடி வந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் அவர்கள் பெருங்குடியில் பதுக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரித்ததில் கண்ணகி நகரை சேர்ந்த கிச்சா(எ) கிருஷ்ணமூர்த்தி(32), பெருங்குடியை சேர்ந்த பார்த்திபன்(22), துரைப்பாக்கத்தை சேர்ந்த ஜெகன்(22), ராஜாராம், மற்றும் ஒரு சிறார் என தெரியவந்தது. இதில் கிச்சா மீது 6 கொலை முயற்சி, ஒரு கொலை வழக்கு, அடிதடி, கஞ்சா வழக்கு என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 5 பட்டாக் கத்திகள், ஒரு ஆட்டோ, இருசக்கர வாகனம், 8 செல்போன்கள், 2 நூல் கண்டு, கற்கள், 3 மோடம், வெடிபொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறார் ஒருவரை சிறார் சீர் திருத்த பள்ளியிலும் மற்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.