கும்பகோணம், ஆக. 25 –
அதிமுக சார்பில் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் அவ்வழக்கில் தங்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் அளித்த மனுவில் தெரிவித்துயிருந்தனர். இந்நிலையில், அவ்வழக்குக் குறித்த விசாரணை முடிவடைந்த நிலையில் அதற்கான தீர்ப்பு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. மேலும் அத்தீர்ப்பு குறித்து தீர்ப்பளித்த நீதிபதிகள், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து சென்னை நீதிமன்ற உத்தரவினைக் கொண்டாடும் வகையில் கும்பகோணம் மாநகரத்திலுள்ள காந்தி பூங்கா அருகில் மாநகர செயலாளர் ராம ராமநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்வின் போது கும்பகோணம் மாநகர அதிமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.




















