கும்பகோணம், செப். 14 –
கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியில் வடிவமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலைக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அபிஷேகம் செய்து அந்த சிலையினை முறைப்படி வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்து இச்சிலையை வடிவமைத்த ஸ்தபதிகளுக்கும், பொன்னாடை அணிவித்து பாராட்டி மகிழ்ந்தார். உடன் நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையை அடுத்துள்ளது திம்மக்குடி கிராமம். இக்கிராமத்தில் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்ப சாலையை வரதராஜ் என்பவர் கடந்த 25 ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் முக்கால் அடி முதல் 11 அடி உயரம் வரையிலான பலவிதமான சுவாமி சிலைகளை தயார் செய்து தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, பல வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறார் மேலும் இவரது வேலைப்பாட்டில் உருவாகும் கலைநயம் கொண்ட சிலைகள்அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இதுவரை கும்பகோணம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் கோயிலில் உள்ள நடராஜர் சிலை தான் 8 அடி உயரத்துடன் உலகிலேயே பெரிய ஐம்பொன் நடராஜர் சிலையாக இருந்தது. அதன் பிறகு, கடந்த 2006ம் ஆண்டு இதை விட பெரிதாக 11 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலை இந்திய அரசின் ஏற்பாட்டின் பேரில், சுவிட்சர்லாந்த் நாட்டில் ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் நிறுவ, இவரது நிறுவனத்தால் தயார் செய்து அனுப்பப்பட்டது. அதுவே இதுவரை உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்தது.
இதனையடுத்து இவரது கனவு, இவரது சாதனையை இவரே முறியடித்ததாக இருக்க வேண்டும் என்பதனை போல, இதைவிட பெரிதாக, சுமார் 23 அடி உயரத்தில் நடராஜர் சிலை வடிக்க வேண்டும், அதுவும் ஒற்றை வார்ப்படத்தில் என்பதனை முக்கியமாக கொண்டு செயல்பட தொடங்கினார். சுமார் 4 ஆண்டு கால தேடலில் 2010ல் ஒரு ஸ்பான்ஷர் கிடைத்தார் அதனையடுத்து இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி 2012 வரை நடைபெற்றது. அதன் பிறகு அந்த ஸ்பான்ஷரால் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட முடியவில்லை, பின்னர் இரு வருட தேடலில் மற்றொரு ஸ்பான்ஸ்ஷராக நக்கீரன் ஆசிரியர் கோபால் வாயிலாக, வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பீடம் கிடைத்த பிறகு, மீண்டும் பணிகள் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள் நிறைவில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 25 ஆயிரம் சிற்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பின் வெளிப்பாடாக தற்போது இப்பணிகள் முழுமை பெற்றுள்ளது 15 டன் எடையில் 23 அடி உயரமும் 17 அடி அகலமும் நான்கு கரங்களுடன் ஒற்றை வார்பு முறையில் வடிவமைத்துள்ளனர்.இதன் பணிகள் அண்மையில் முழுமை பெற்றது.
இச்சிலைகளின் பிற சிறப்புகளாக கூறுப்படுவது, முயலனை மிதித்திக் கொண்டிருப்பதை போல ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையின் இரு மகரப் பறவைகளுடன் தத்ரூபமாக முழுவதும் சோழர் கால பாணியிலேயெ அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரிய திருவாட்சியில், 102 தாமரைப்பூக்கள், 50 பூதகணங்கள், 52 சிங்கங்கள், 34 சர்பங்கள் இருப்பது போல வடிக்கப்பட்டுள்ளது, இதன் மேல் வரிசையில் சிவ அட்சரங்கள் 51ஐ பிரதிபலிக்கும் வகையில் 51 தீ சுவாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் கொண்டு பீடத்தில், திருவாசகங்கள் பொறிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஸ்தபதி வரதராஜ் தெரிவித்தார்.
இந்த பிரமாண்டமான நடராஜர் சிலைக்கு சோமவார தினமான நேற்று மாலை பிரதோஷ வேளையில், நந்தி வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்களை ஸ்தாபித்து தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் சிறப்பு வேள்வி நடத்தி அதன் நிறைவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதன்மை சிறப்பு விருந்தினராக, கலந்து கொண்டு, முதல் அபிஷேகம் செய்து தொடங்கி வைக்க, அதனை தொடர்ந்து நக்கீரன் கோபால், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ், ஆகியோர் சிலையை வடிவமைத்த ஸ்தபதிகள் ஆகியோர் அபிஷேகம் செய்தும், உதிரி மலர்கள் தூவி வழிபட்டனர். தொடர்ந்து, பிரமாண்டமான நடராஜர் சிலைகள் தொடர்ந்து சிவனடியார்கள் விபூதி, பால், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்வித்து மகா தீபாராதனை செய்யப்பட்டது, பிறகு, 20க்கும் மேற்பட்ட வெண்புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டது, உதிரி ரோஜா மலர்கள் தூவ, இப்பிரம்மாண்டமான சிலை முறைப்படி, டாக்டர் தமிழிசை சௌதர்ராஜன், லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரமாண்டமான நடராஜரையும், அதன் அபிஷேக ஆராதனைகளையும் கண் குளிர கண்டு தரிசனம் செய்தனர்.
அங்கிருந்து புறப்படும் முன்னர், ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, இந்த பிரமாண்டமான 23 அடி உயர நடராஜர் சிலையை ஸ்தபதிகள் சீனிவாசன், வரதராஜ் மற்றும் மயூத் ஆகியோர் இணைந்து 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு பொறுமையாக மிக சிறப்பாக அழகாக வடிவமைத்து, நம் இந்திய கலையை கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள், பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது பணி அமைந்துள்ளது அவர்களை பாராட்டுகிறேன் என்றார் இப்பணிக்கு பக்கபலமாக நக்கீரன் கோபால் அவர்களும், வேலூர் நாராயணி பீடம் அம்மா அவர்களும் இருந்துள்ளார் என்றும் ஆளுநர் தமிழிசை மேலும் தெரிவித்தார்