மதுரை, அக். 27 –
மதுரை மாவட்டம் ஒய். கொடிக்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் 4வது தெருவில் யானைமலை கண்மாயில் இருந்து வடிந்தோடும் தண்ணீர் மற்றும் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் 4 வது தெரு பகுதியில் மழைநீரும் யானைமலை கண்மாயில் இருந்து வடிந்து வரும் தண்ணீரும் வெகு நாட்களாக தேங்கி பாசி படர்ந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்வோர்கள், வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி மாணவர்களும் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் சூழலும் நிலவி வருகின்றது. இதனை தொடர்ந்து இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்து சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வெகு நாட்கள் தண்ணீர் தேங்கி இருப்பதால் துற் நாற்றம் வீசத் தொடங்குகிறது. அதனால் டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
ஊராட்சி, நகர மற்றும் மாநகர சுகாதார ஆய்வலர்கள் உடனடியாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றியும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கொசு மருந்து மற்றும் இதர நோய்தடுப்பு மருந்து தெளிப்பான்களை தெளித்து எதிர் வரயிருக்கும் நோய் தொற்றை தடுத்திட வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.