தஞ்சாவூர், மார்ச். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர்.

அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில், தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஒரு நாள் சுற்றுலாவானது பார்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி தஞ்சையிலிருந்து இரண்டு பேருந்துகளில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என 120 நபர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடைபெற்ற  பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மாணாக்கர்கள் அனைவரையும் உற்சாகமாக கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் ஒவ்வொரு மாணவராக கடலில் இறங்கினர்கள். முதன் முதலாக தங்கள் கால்களில் கடல் அலைகள் உரசிச்சென்றதை உணர்ந்த பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாணவர்கள் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்து கடல் அலைகளை தொட்டுப்பார்த்து மகிழ்ந்தனர் .

அந்நிகழ்வுக் குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சக மனிதர்களைப் போல, கடற்கரைக்கு சென்று கடல் அலையில் கால் நனைக்கும் எளிய ஆசை கூட அவர்களுக்கு மிகவும் கடினமானதுதான். மேலும் அவர்களின் அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த சுற்றுலாவை பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தோம். தஞ்சை மேம்பாலம் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து பார்வை மாற்றுத்திறன் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரை இரண்டு சுற்றுலா பேருந்துகளில் தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்தோம்.

தொடர்ந்து, வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் கடற்கரை ஓரத்தில் இருந்து கடல் அலைகளின் ஓசையையும் கடற்கரை காற்றையும் உணர்ந்த பின்னர் கடலில் ஒவ்வொருவராக இறங்கி கடல் அலை தங்கள் கால்களை நனைத்து சென்றதை கண்டு ஆனந்தமடைந்தனர்.

மேலும் கடலில் இறங்கி விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையை பொதுமக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும் அங்கிருந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் கடற்கரைகளில் இனி குப்பை போடாதீர்கள் என அங்கிருந்த பொதுமக்களிடம் வேண்டுகோள் பிரச்சாரத்தையும் அவர்கள் மேற்கொண்டனர் என அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் பார்வையிழந்த மாற்றுத்திறன் மாணவர்கள் அச்சுற்றுலா குறித்து தெரிவிக்கையில், எங்கள் பள்ளியில் பயிலும் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள்  தங்கள் வாழ்நாளில் இப்போது தான் முதல் முறையாக கடற்கரைக்கு சுற்றுலா வந்த்தாகவும், மேலும்  கடலில் இறங்கி மகிழ்ந்ததாகவும், இந்த ஏற்பாடு தங்களுக்கு புது அனுபவமாக இருந்ததாகவும் மற்ற மாணவர்களை போல் நாங்களும் கடலில் இறங்க வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் இருந்த நிலையில் இப்படிப்பட்ட சுற்றுலா எங்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது என்றும் முதன் முதலில் தங்களை போன்ற சக மாற்றுத்திறனாளிகளுடன் கடலில் இறங்கி விளையாடியது புதிய அனுபவமாகவும் இருந்தது என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக சிக்கல் சிங்காரவேலர் கோவிலிலும் பார்வை மாற்றுத்திறன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இறை வழிபாடு மேற்கொண்டனர் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ( பொறுப்பு ) மாணிக்கராஜ் , ஆசிரியை சோபியா மாலதி உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியர்கள் ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சுற்றுலாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டனர் .

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் வெகுச்சிறப்பாக பாதுகாப்புடன் செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here