சென்னை, ஜூலை, 25-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் வணிகவரித்துறை சுற்றும் படை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வாகனத்தணிக்கை, வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக ஈரோடு வணிகவரி துறை சுற்றும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடு பட்ட போது , மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இரயில் நிலையத்திலிருந்து கோவிட் 19 சிறப்பு இரயில் மூலமாக ஈரோடு இரயில் நிலையத்திற்கு 250 சிப்பம் ஆயத்த ஆடைகள் எவ்வித ஆவணங்களும் இன்றி அனுப்ப பட்டுள்ளதாக அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சென்னை வணிகவரி ஆணையர் உத்திரவின்படி, ஈரோடு வணிகவரி நுண்ணறிவுக் கோட்ட இணை ஆணையர் மா.வ. நுண்ணறிவு மற்றும் சுற்றும் குழு அலுவலர்களால் துரிதமாக செயல்பட்டு கடந்த 21 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் ஈரோடு இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த சரக்கு பெட்டகத்தில் ஆயத்த ஆடை சிப்பங்களை ஆய்வு செய்ததில், சம்பந்தப் பட்ட சரக்குகள் சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களான இரசீது மற்றும் மின்னணுப் பட்டிநல் ஏதுமின்றிக் கொண்டு வரப்பட்டதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து சேவைவரிச் சட்டத்தின் படி ஆவணங்களின்றிக் கொண்டு வரப்பட்ட சரக்குகள் மீது வரி மற்றும் தண்டனைத்தொகையாக மொத்தம் ரூ.12,50,000 வசூலிக்கப்பட்டு சரக்குகள் விடுவிக்கப்பட்டன. மேலும் , இது தொடர்பாக சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு சந்திப்பு முதன்மை பார்சல் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைச்சட்டம் 2017 இன் கீழ் 6,50,000 தண்டம் விதித்தும் சரக்கு அனுப்பியவர் மற்றும் பெறுபவர்களுக்கு ஆவணங்களின்றி சரக்குப் போக்குவரத்து மேற் கொள்ள துணை போனதற்காக ரூ.50,000 தண்டம் விதித்தும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.