தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும். சித்திரை முதல் நாள் டெல்டா மாவட்டங்களில் நல்லேர் பூட்டும் விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி, பனையூர் கிராமத்தில், விவசாயிகள் வயலில் கலையம் வைத்து. பூ. பழம். காப்பரிசி நெல் உள்ளிட்ட நவதானியங்களை வைத்து பூஜை செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர்.
ஏர் மாடு, மற்றும் டிராக்டர்களுக்கு ஆரத்தி காட்டி வயலில் உழுது வேளாண் பணிகளை துவங்கினார்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூரியனை வழிபட்டு நெல் மணிகளை வயலில் தூவி வழிபட்டனர். இந்த ஆண்டு தண்ணீர் தட்டுபாடு இல்லாமல், விவசாயம் செழித்து ஒங்க வேண்டும் என வேண்டி இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை விவசாயிகள் துவங்கினார்கள்.






















