திருத்துறைப்பூண்டி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும் வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும்.
இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ளது. மேலும் அச்சாலையை சீரமைத்து தரும்படி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை தெரிவித்து வந்ததாகவும், அதுக்குறித்து அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததால் வங்கநகர் பொதுமக்கள் கடந்த லோக்சபா தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவ்வூர் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி அத்தொகுதி எம் எல் ஏ மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டவர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அச்சாலை பிரச்சினைக்குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்த நிலையில் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் .
6 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த தார் சாலையின் இரு பக்கமும் உள்ள சாளுவனாறு வடிகால் ஓடைகளில் மழைக் காலங்களில் நீர் தேங்கியதால் அந்த தார் சாலை இரு பக்கம் உள்ள கரைகளும் சரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தார் சாலை போடுவதற்கு முன்பாக சாலையை இரு பக்கமும் பராமரிக்க அதிக அளவில் மண் தேவைப்பட்டது. கலெக்டர் உத்தரவின் பேரில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, தாசில்தார் காரல் மார்க்ஸ், முத்துப்பேட்டை ஆணையர் மாலதி, பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் அப்பகுதியை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு முதற்கட்டமாக அச் சாலையின் இருபுறமும் மண்டி கிடந்த கருவேல மரங்களையும் புதர்களையும் அகற்றவும், வங்க நகர் படுகையில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுத்து சாலையை மேம்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று 6 ம் தேதியிலிருந்து சாலை பராமரிப்பு பணிக்காக டிப்பர் டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து வந்து சாலை மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ மற்றும் எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். முழுமையாக சேதம் அடைந்து உள்ள இந்த தார் சாலையை சிறப்பு திட்டம் மூலம் தரமான தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.