தஞ்சாவூர், டிச. 01 –
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் பங்கேற்ற அனைவரையும் உழவர் விவாத குழு அமைப்பாளர் சதாசிவம் வரவேற்றார். இப்பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் போது, நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றியும் நெற்பயிரில் உர மேலாண்மை பற்றியும் நெல் வயலில் துத்தநாக சல்பேடின் முக்கியத்துவம் பற்றியும் தஞ்சையில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
ஒரத்தநாடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுமார் உரை நிகழ்த்தும் போது, பி எம் கி கிசான் இ கே ஒய் சி செய்வதை பற்றியும் தென்னையில் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன் பஞ்சகாவியா, தசகாவியா, தேமோர் கரைசல், அரப்பு மோர் கரைசல் ,சீயக்காய் மோர் கரைசல் இது போன்ற கரைசல்களை தயாரிக்கும் முறை பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்து தெளிவுரை நிகழ்த்தினார்.
ஒரத்தநாடு வட்டார வேளாண்மை உதவி அலுவலர் ஜோசப் ஹில்லாரி கலைஞர் திட்டங்கள் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தோட்டக்கலை உதவி அலுவலர் கோபிநாத் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி பற்றியும் தோட்டக்கலை மானிய திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் நாற்பதற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன் சிறப்பாக செய்திருந்தார்.