சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதி, 1 மேல்சபை எம்.பி.யும் தருவதாக கூறி கூட்டணி அமைத்துள்ளது.

இதுதவிர புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், புதிய தமிழகத்துக்கும் 1 தொகுதியும் ஒதுக்கி கூட்டணியை அமைத்துள்ளது.

இந்த கூட்டணியில் தே.மு.தி.க கட்சியையும் சேர்க்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. இதற்காக மத்திய மந்திரி பியூஸ் கோயல் விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் பா.ம.க.வுக்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கி தந்தால் கூட்டணியில் சேருவோம் என்று நிபந்தனை விதித்தார்.

தே.மு.தி.க. சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்த கட்சி. தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெற்ற கட்சி. எனவே பா.ம.க.வை விட ஒரு தொகுதி அதிகம் வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.

இதற்கு மத்திய-மந்திரி பியூஸ் கோயல், நாங்கள் உறுதி சொல்ல முடியாது. அ.தி.மு.க.வினர் உங்கேளாடு பேசுவார்கள் என்று கூறிவிட்டு டெல்லி சென்று விட்டார்.

அதன்பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதியில் இருந்து ஆரம்பித்து கடைசியாக 5 தொகுதிகளும் 1 மேல்சபை எம்.பி.பதவியும் தருவதாக பேசி வந்தனர். இதற்கும் விஜயகாந்த் சம்மதிக்காமல் கூடுதல் தொகுதி கேட்டப்படி இருந்தார்.
இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது 20 சதவீத இடங்களை தே.மு.தி.க.வுக்கு தருவதாக அ.தி.மு.க. தரப்பில் எடுத்துச் சொல்லப்பட்டது.

ஆனாலும் தே.மு.தி.க. தரப்பில் இருந்து சம்மதம் தெரிவிக்கப்படவில்லை.
அ.தி.மு.க. தரப்பில் இருந்து மீண்டும் விஜயகாந்தை தொடர்பு கொண்டபோது 5 எம்.பி. தொகுதி, 1 மேல்சபை எம்.பி. பதவி தருவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும். இதற்கு அ.தி.மு.க. ஆதரவு தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.
இந்த விஷயத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து கூறினார்கள். ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இடைத்தேர்தல் நடைபெறும் 21 சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க தொகுதியாகும். இதில் அ.தி.மு.க. நிற்கும். வேறு எந்த கட்சிக்கும் ‘சீட்’ கொடுக்க முடியாது என்று கறராக கூறிவிட்டார்.
அ.தி.மு.க. பெரிய கட்சி. இதற்கு மேல் தே.மு.தி.க.விடம் இறங்கி போக வேண்டியதில்லை என்று கூறிவிட்டார்.
நாங்கள் ஒதுக்கும் 5 பிளஸ் 1 எம்.பி. தொகுதிகளை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வாருங்கள். மற்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமையிடம் எடுத்து கூறி உள்ளனர். ஆனால் இதற்கு தே.மு.தி.க.வில் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

இதுகுறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகியிடம் கேட்டதற்கு, “அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்பியதால் தான் நாங்கள் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் நிபந்தனை மேல் நிபந்தனை விதிக்கிறார்கள். எல்லா நிபந்தனைகளுக்கும் நாங்கள் தலையாட்ட முடியாது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் அவர்களுக்கும் லாபம். வராவிட்டால் அவர்களுக்கு தான் நஷ்டம். முடிவு அவர்கள் கையில்”.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here