சென்னை:

தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இழுக்க இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் மேல்மட்ட நிர்வாகிகளும் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தே.மு.தி.க.வின் தொகுதி பங்கீடு குழுவினர் கட்சி அலுவலகத்தில் கூடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வரும் நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி விட்டது.

தே.மு.தி.க.வின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் உள்ள நிர்வாகிகளுடன் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். பரபரப்பாகி வரும் தேர்தல் களத்தில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

தினமும் பத்திரிகையாளர்களும், ஊடக துறையினரும் கட்சி அலுவலக வாசலில் குவிந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். காலை 10 மணிக்கு தொகுதி பங்கீடு குழு நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன், அன்வர் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர்.

பத்திரிகையாளர்கள் யாரும் தே.மு.தி.க. அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. வெளியில் காத்து நின்றனர். 11.50 மணிக்கு விஜயகாந்த் பின் வாசல் வழியாக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணியில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறுவது குறித்து விவாதித்தனர்.

தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை பா.ம.க.வும் கேட்க கூடும் என்பதால் அவற்றில் எது சாத்தியமாகுமோ அவற்றை வலியுறுத்தி பெறுவது பற்றி ஆலோசித்தனர்.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளையும் விருப்ப பட்டியலாக கொடுக்கலாம் எனவும் அதில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வலியுறுத்தலாம் என்பது பற்றியும் விஜயகாந்த் ஆய்வு செய்தார். பின்னர் 12.25 மணிக்கு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here