திருபுவனம், ஜன.14 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில், அப்பகுதியில் உள்ள சன்னதி தெருவில் உள்ள சுமார் 70 ஆயிரம் சதுர அடி காலியிடம் இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் கோயிலில் சுவாமி தூக்கும் கொத்தனார்கள் 140 பேருக்கு, அவ்விடத்தை கோயில் நிர்வாகம் பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்விடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் என கண்டறியப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரி பங்கையர் செல்வி ஆகியோர் அவ்விடத்திற்கு சென்று நிலத்தை மீட்க முற்பட்டபோது, அத்திருக்கோயில் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கோயில் ஊழியர் செந்தில்குமார் தலைமையில் 25 க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து இடத்தின் முன்புறம் தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தகவலயறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கோயில் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.























