திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் மழைக்காலம் வருவதால் ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். மேலும் பல்வேறு பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைப் பெற்றக் கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.ரவி, ஆர்.குப்புசாமி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆர்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசுகையில் 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றியக்குழு உறுப்பனர்களின் பார்வைக்கு கொண்டு வந்த பின்னர் பணிகளை ஒப்படைக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களே அனைத்து பணிகளையும் செய்கின்றனர்.
எனவே இந்த பணிகளை ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் கொரோனா 3வது அலை வர வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. எனவே கொரோனா 3வது அலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா பரவாமல் முழுமையாக தடுக்க வேண்டும்.
மழைக்காலம் வருவதால் ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றனர். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.