கும்பகோணம், ஜூலை. 05 –
கும்பகோணம் அருகே ஆடுதுறை சிவ சிவா காலணியில் உள்ள வலம்புரி ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை சிவ சிவா காலணியில் உள்ள வலம்புரி ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா அருள் பாலிக்கிறார்கள்.
இத்தகைய பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த ஜூலை 1ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை மூலமந்திர ஹோமம் ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, நேற்று காலை 4 ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹு_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, பஞ்சமி திதி, பூச நட்சத்திரம், சிம்ம லக்னத்தில், புனிதநீரை விமான கோபுர கலசத்தில் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இந்த கும்பாபிஷேகத்தில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பவளக்கொடி ராஜேந்திரன் தெருவாசிகள் ஆலய பொறுப்பாளர்கள் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.