வாஷிங்டன்:
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசராகவும் பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
அதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. இந்த நிலையில், ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டனில் இதனை அறிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி மைக்கல் இவானாஃப், ஹம்சா பின்லேடன் சர்வதேச தீவிரவாதி, அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஹம்சா பின்லேடன் உத்தரவிட்டு ஆடியோ மற்றும் வீடியோக்கள் வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.